6 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது
சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் 6 நாட்களாக நடந்து வந்த போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் 6 நாட்களாக நடந்து வந்த போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
போராட்டம்
திருவண்ணாமலை தாலுகா சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட உள்ளதாக தெரிகிறது. வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். மேலும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய விவசாய கிராமப்பு தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து கடந்த 29-ந்தேதி முதல் நேற்று வரை தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டியும், மடியேந்தி பிச்சை எடுத்தும், சமையல் செய்தும், மனித சங்கிலியாக நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்த நிலையில் 6-வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தாசில்தார் சரளா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விரைவில் பட்டாவுடன் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும். மாற்று இடம் வழங்கிய பின்னர் இடத்தை காலி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 6 நாட்கள் நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.