தலைமறைவாக இருந்த வியாபாரி கைது
திண்டுக்கல்லில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வியாபாரியை போலீசார் ைகது செய்தனர்.
திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வடக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செம்பட்டியில் இருந்து ஆட்டோவில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த பெஞ்சமின் பிராங்கிளின் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த நெப்போலியன் (30) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து கஞ்சா, ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரிடமும் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது, கஞ்சா வியாபாரியான திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த ஹரிசங்கர் (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய சென்ற போது அவர் தலைமறைவானார். பின்னர் தனிப்படை அமைத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் ஹரிசங்கர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னை விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர்.