தலைமை ஆசிரியரை தாக்கிய நிர்வாகிக்கு வலைவீச்சு


தலைமை ஆசிரியரை தாக்கிய நிர்வாகிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டுபோட்ட நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

தேனி

உதவி பெறும் பள்ளி

தேனி சுப்பன்தெரு திட்டச்சாலையில் ராஜவாய்க்கால் கரையோரம் மகாராஜா தொடக்கப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சென்றாயப்பெருமாள் உள்ளார். இங்கு சுமதி என்ற ஆசிரியையும் பணியாற்றி வருகிறார். சுமார் 20 மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் முகமை பொறுப்பாளராக இருப்பவர் அன்பழகன். அவர் அல்லிநகரத்தில் உள்ள மற்றொரு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார்.

தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்

இந்நிலையில் இந்த பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டு இருந்தனர். அப்போது நிர்வாகி அன்பழகன் அங்கு வந்தார். மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாளை அவர் தாக்கினார். இதில் தலைமை ஆசிரியர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் தலைமை ஆசிரியர், ஆசிரியை மற்றும் மாணவ, மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டுப்போட்டு விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில், முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் அந்த பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பள்ளிக்கு வெளியே காத்திருந்த மாணவ, மாணவிகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வழக்குப்பதிவு

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாள் நேற்று ஒரு புகார் செய்தார். அதில், 'எனக்கு பள்ளியில் சம்பளம் நிறுத்தப்பட்டதால் ஐகோர்ட்டை நாடினேன். கோர்ட்டு உத்தரவுப்படி சம்பளம் பெற்றேன். இதனால், பள்ளி நிர்வாகி அன்பழகன் என்னிடம் தகராறு செய்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து என்னை தாக்கினார். எனக்கும் ஆசிரியை சுமதிக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் எங்களை வெளியேற்றி பள்ளியை பூட்டிச் சென்றார். என்னுடைய செல்போனையும் பறித்துச் சென்றார்' என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தேனி போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளி நிர்வாகியான அன்பழகன் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்தார். தலைமறைவாக உள்ள அன்பழகனை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளி மாற்றம்

இதற்கிடையே மகாராஜா பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள், பங்களாமேட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேற்று மாற்றப்பட்டனர். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் ஹெலன் மெடில்டாவிடம் கேட்டபோது, 'மாணவ, மாணவிகளின் நலன் கருதி தற்போது அவர்கள் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தப்படும். அங்கு இருந்தபடியே ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள்' என்றார்.

இதற்கிடையே பள்ளியில் மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியர் சென்றாயப் பெருமாளை, அன்பழகன் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்துக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story