தாம்பூலத்தட்டில் தக்காளி வைத்து மாநாட்டுக்கு அழைப்பிதழ் வழங்கிய அ.தி.மு.க.வினர்


தாம்பூலத்தட்டில்  தக்காளி  வைத்து  மாநாட்டுக்கு அழைப்பிதழ்  வழங்கிய  அ.தி.மு.க.வினர்
x
தினத்தந்தி 10 Aug 2023 1:45 AM IST (Updated: 10 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், தாம்பூலத்தட்டில் தக்காளியை வைத்து மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினர் அழைப்பிதழ் வழங்கினர்.

திண்டுக்கல்

மாநாடு அழைப்பிதழ்

மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க.வினர் மத்தியில், இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சாக நடந்து வருகிறது. மாநாடு தொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் நேற்று நடந்தது.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாட்டு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் ஜென்னத்துல் பிர்தவுஸ் முன்னிலை வகித்தார்.

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தாம்பூலத்தட்டில் தக்காளி

பொதுவாக அழைப்பிதழ் கொடுக்கும்போது தாம்பூலத்தட்டில் வெற்றிலை-பாக்கு மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை உள்ளிட்ட பழங்களை வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது தான், நீண்ட நெடுங்காலமாக நம்முடைய மரபாக இருந்து வருகிறது.

ஆனால் நேற்று அ.தி.மு.க.வினர் அழைப்பிதழ் கொடுத்தபோது தாம்பூலத்தட்டில் வெற்றிலை, பாக்குடன் தக்காளி பழங்களை வைத்திருந்தனர். இது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை இரட்டை சதத்தை நோக்கி பயணித்த தக்காளி, தற்போது தாம்பூலத்தட்டிலும் வலம் வர தொடங்கி விட்டது என்று மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

வீடு, வீடாக வினியோகம்

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தொடக்க நிகழ்வாக 50 பேருக்கு தக்காளியுடன் அழைப்பிதழ்களை வழங்கினார்.

அதன்பிறகு பழனி நகராட்சி 25-வது வார்டில் உள்ள 650 குடும்பத்தினருக்கு, கவுன்சிலர் ஜென்னத்துல் பிர்தவுஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று அழைப்பிதழ்களை வினியோகம் செய்தனர்.

ஒரு அழைப்பிதழுடன், ஒரு கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது. எட்டாக்கனியாக இருந்த தக்காளியுடன் கொடுத்த அழைப்பிதழை பொதுமக்கள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கினர்.


Next Story