சட்டமன்றத்திலும், வெளியேயும் சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது -ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
‘சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது’, என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த ஓராண்டு காலமாக சிறந்த எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்துக்கு வெளியிலேயும் இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் இயக்கம். ஆனால் எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அ.தி.மு.க. பின்தங்கி இருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.
நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த களப் பணியாளர்களை மாற்றுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தி.மு.க.வினர் மிரட்டியபோது, அதனைக் கண்டித்தேன். இதனைத் தொடர்ந்து களப் பணியாளர்களை மாற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க தி.மு.க. அரசு முடிவெடுத்தபோது, அதனை நான் கண்டித்ததால் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதேபோல ஓமந்தூரார் மருத்துவமனையும் இன்றளவும் மாற்றியமைக்கப்படவில்லை. எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு மூடு விழா நடத்திய தி.மு.க. அரசை கண்டித்த நிலையில், இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆட்சி
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டி பல அறிக்கைகளை நான் விடுத்திருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளுதல், எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சியினரின் மக்கள் விரோத போக்கை சுட்டிக்காட்டுதல். இதுதான் ஜெயலலிதா எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம்.
ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியின் அவல நிலையையும், அ.தி.மு.க.வின் செயல்பாடுகளையும் வைத்தே தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அ.தி.மு.க.வின் ஆட்சிதான் என்பதை அறுதியிட்டு உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.