பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்வதே அரசின் நோக்கம்
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்வதே அரசின் நோக்கம் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்வதே அரசின் நோக்கம் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை ஒன்றியம் தென்மாத்தூர் ஊராட்சியில் வன விரிவாக்க மையத்தில் உள்ள நாற்றங்கால மையத்தையும், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்கொளத்தூர் காப்பு காட்டில் அமைந்துள்ள நாற்றாங்கல் மையத்தையும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று மாலை நேரில் சென்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டார். மேலும் அவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகளிலும் நடவு மேற்கொள்ள வனத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் இந்தாண்டு இதுவரை 17 மாவட்டங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழங்குடியினர் மக்களுக்கு தேவையான சாலை வசதி, தண்ணீர் வசதி, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, மின் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் பசுமை தமிழ்நாடு என்ற தொலைநோக்கு பார்வையில் பசுமை இயக்கத்தை செயல்படுத்தி வருகிறார். நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பரப்பாக இருந்தால் தான் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும் என இந்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நிச்சயம் நடவடிக்கை
அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் மலைவாழ் மக்களுக்கு மலைபகுதிகளில் விளைகின்ற அன்னிய தாவரங்களை அகற்றி கால்நடை தீவனப்பயிர்களை பயிர் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வனத்துறையின் சார்பில் அடர்ந்த வனப்பரப்பை ஏற்படுத்தி முழுக்க முழுக்க மலைவாழ் மக்கள் பயன் பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய செய்வதே அரசின் நோக்கமாகும்.
மலைப்பகுதியில் பாறைகள், கற்கள் கடத்தப்படுவது தொடர்பாக முதல்-அமைச்சர் தற்போது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வனத்துறையில் சரியாக எந்த வேலையும் நடைபெறவில்லை.
தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு தான் வன பரப்பளவு அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் முருகேஷ், மாவட்ட வன அலுவலர் அருண்லால், திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனுவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.