பொய் வழக்கில் ஆந்திர போலீசார் கைது செய்தவர்களை மீட்டுத்தர வேண்டும்
போச்சம்பள்ளி அருகே பொய் வழக்கில் ஆந்திர போலீசார் கைது செய்தவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று குறவன் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
தமிழ் பழங்குடி குறவன் சங்க மாநில தலைவர் ரமேஷ் தலைமையில், 15-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
தொடர்ந்து தமிழ் பழங்குடி குறவன் சங்க மாநில பொது செயலாளர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-
பொய் வழக்கில் கைது
போச்சம்பள்ளி அடுத்த புளியாண்டபட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணம்மாள் (65), அருணா (30), சத்யா (45), பூமதி (24) ஆகிய 4 பெண்கள், அய்யப்பன் (45), ரமேஷ் (50) ஆகிய 2 ஆண்கள், மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் ஆந்திர மாநில சித்தூர் கிரைம் பிரிவு போலீசார் பொய் வழக்கில் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
அவர்களின் நிலை என்ன என்பது கூட தெரியவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் மூலம் மத்தூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்குமாறு போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் பயனில்லை.
போலீசார் மீது நடவடிக்கை
கைது செய்யப்பட்டு அழைத்து சென்ற குறவர் இன மக்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் உள்ள சித்தூர் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறவர் இனத்தை தொடர்ந்து கேவலமாக பேசுவதாலும், பொய் வழக்கு போடுவதாலும் எங்கள் இனத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர்.
ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அடுத்த எலச்சூரை சேர்ந்த மணிமேகலை என்ற பெண் கடந்த 2003-ம் ஆண்டு போலீசாரின் கெடுபிடியால் தற்கொலை செய்து கொண்டார். அதே பகுதியை சேர்ந்த சங்கர், 2020-ம் ஆண்டு போலீஸ் கெடுபிடியால் தற்கொலை செய்து கொண்டார். ஊத்தங்கரையை அடுத்த முதுகலை பட்டதாரி ராஜ்குமார் மீது கடந்த, 2021-ம் ஆண்டு பொய் வழக்கு போட்டனர். இது குறித்து நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
தற்போது தமிழக போலீசுக்கே தெரியாமல் ஆந்திர போலீஸ் இங்கு வந்து குறவரின மக்களை பொய் வழக்கில் கைது செய்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.