சாராயம் கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கல்வராயன்மலையில் சாராயம் கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி
கல்வராயன்மலை அருகே உள்ள சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி மகன் சந்தோஷ்குமார்(வயது 25), தீர்த்தன் மகன் சைலோகார்த்தி(24). இவர்கள் இருவரும் சேராப்பட்டு அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாா் கைது செய்து அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயம் மற்றும் 4 சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மீது சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இவர்களின் குற்ற நடவடிக்கையை கட்டுப் படுத்தும் வகையில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சந்தோஷ்குமார், சைலோகார்த்தி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சமுதாயத்தை சீர்குலைக்கும் சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற சட்டத்துக்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.