2 கட்டங்களாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும்
நாகை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற 2 கட்டங்களாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற 2 கட்டங்களாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமைத்தொகை
நாகை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 4-ந்தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும், முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிட்டு இருக்கும்.இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வந்து வழங்குவர். டோக்கன் வழங்கும் பணியானது முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பாக தொடங்கும். குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை பகுதிகளில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
21 வயது நிரம்பிய பெண்
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.விண்ணப்ப பதிவு ஞாயிறுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
திருமணமாகாத தனித்த பெண்கள்
அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத்தலைவிகளாகக கருதப்படுவர்.
இது குறித்த சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 04365 251992 என்ற தொலைபேசி எண் மூலம் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.