அரங்குளநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


அரங்குளநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்குளநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-ந் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

புதுக்கோட்டை

அரங்குளநாதர் கோவில்

திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புலிங்க சிவன் கோவிலாகும். வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று மாவிலை தோரணங்கள் மற்றும் வாழைமரம் கட்டி கோவில் அலங்கரிக்கப்பட்டது.

பின்னர் சந்திரசேகர சுவாமிகள் கொடி படத்துடன் ஊர்வலமாக நான்கு தேரோடும் வீதிகளில் சென்றது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.

கொடியேற்றம்

அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கொடிமரத்துக்கு வேதமந்திரங்கள் முழங்க வழிபாடு செய்தனர். யாகசாலை பூஜை அமைத்து ஹோமம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் 75 அடி உயரமுள்ள கொடிமரத்தில் காமதேனு வாகனம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து சுவாமி- அம்பாள் வாகனத்தில் எழுந்தருள செய்து தேரோடும் நான்கு வீதிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைதொடர்ந்து மண்டகப்படிகாரர்களால் தினமும் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. வருகிற 11-ந் தேதி காலை 9 மணிக்கு சுவாமி- அம்பாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. 12-ந் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.


Next Story