பக்ரீத் பண்டிகையையொட்டி கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.
பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.
450 மாடுகள்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 50-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், சேலம், கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 250 பசுமாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 450 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
மாடுகள் வரத்து குறைந்தது
இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'பொதுவாக சந்தைக்கு 550 முதல் 650 மாடுகள் வரை விற்பனைக்கு வரும். ஆனால் இன்று (அதாவது நேற்று) கூடிய சந்தைக்கு 450 மாடுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டன. அதே நேரத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி வியாபாரிகளும் அதிகமானோர் வரவில்லை. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 70 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனை ஆனது' என்றனர்.