திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டத்தெரியாமல் உருட்டி சென்ற ஆசாமி


திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டத்தெரியாமல் உருட்டி சென்ற ஆசாமி
x
தினத்தந்தி 7 Jun 2023 2:16 AM IST (Updated: 7 Jun 2023 12:16 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டத்தெரியாததால் உருட்டிச் சென்ற ஆசாமியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டத்தெரியாததால் உருட்டிச் சென்ற ஆசாமியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

தக்கலை அருகே உள்ள மணலிக்கரை ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் மார்சிலின் (வயது 69), மீன் வியாபாரி. இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்புறம் உள்ள காம்பவுண்டு சுவர் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் எழுந்த மார்சிலின் காம்பவுண்டு சுவர் அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மார்சிலின் இதுபற்றி கொற்றிக்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மடக்கிப்பிடித்தனர்

அப்போது, அதிகாலையில் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடுவதும், பின்னர், அந்த நபர் அதனை ஓட்டிச் செல்லாமல் உருட்டி செல்வதும் பதிவாகியிருந்தது. உடனே, ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் சரல்விளையில் ஒருவர் மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்ததை பார்த்தனர். உடனடியாக சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்த உச்சிமாளி (42) என்பதும், குடை பழுதுபார்க்கும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், மோட்டார் சைக்கிளை மணலிக்கரையில் திருடியதும், ஓட்டத் தெரியாததால் உருட்டிக்கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து உச்சிமாளியை கைது செய்தனர்.


Next Story