திருட சென்ற வீட்டில் போதையில் தூங்கிய ஆசாமி
மதுரை அவனியாபுரம் பகுதியில் திருட சென்ற வீட்டில் மது போதையில் தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள பராசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 53). பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் அவர் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.4 ஆயிரத்தை காணவில்லை. பின்னர் அவர் மற்றொரு அறையில் சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தார். அதை தொடர்ந்து ரத்தினவேல் அந்த கதவை வெளிபக்கமாக பூட்டி வெளியே வந்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று கதவை திறந்து வாலிபரை எழுப்பினர். அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் நடராஜன் (21) என்பதும், அவர் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த போது வீடு பூட்டியிருந்ததால் உள்ளே புகுந்து திருடியதாகவும், அப்போது போதை அதிகமாக இருந்ததால் வீட்டிலேயே தன்னை அறியாமல் தூங்கி விட்டதையும் தெரிவித்தார்.
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்து, அவர் வேறு ஏதாவது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து, போலீசாரிடம் மாட்டி கொண்ட சம்பவங்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவை தற்போது வைரலாகி வருகிறது.
போதை தலைக்கேறி வீட்டிலேயே தூங்கிய திருடன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.