கருங்கலில் போலீஸ் நிலையத்தில் நின்ற காரை திருடிச்சென்ற ஆசாமி கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்


கருங்கலில் போலீஸ் நிலையத்தில் நின்ற காரை திருடிச்சென்ற ஆசாமி கண்காணிப்பு கேமராவால் சிக்கினார்
x

கருங்கலில் போலீஸ் நிலையத்தில் நின்ற காரை திருடிச்சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கலில் போலீஸ் நிலையத்தில் நின்ற காரை திருடிச்சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் திருட்டு

கருங்கல் போலீஸ் நிலையத்தில் போலீசாரின் பயன்பாட்டிற்கு ஒரு கார் உள்ளது. இந்த கார் கடந்த 28-ந் தேதி இரவு வழக்கம் போல் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணிக்கு டிரைவர் காரை எடுக்க வந்தார்.

அப்போது அங்கு வாகனத்தை காணவில்லை. அதை வேறு டிரைவர் மூலம் இன்ஸ்பெக்டர் எடுத்து சென்றிருக்கலாம் என்று நினைத்து இன்ஸ்பெக்டரிடம் போன் செய்து கேட்டார். அப்போது இன்ஸ்பெக்டர் காரை எடுக்கவில்லை என்று கூறினார். அத்துடன் கார் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தார். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாலை 2.30 மணியளவில் ஒரு வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு வந்து சாவி வைத்திருக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து காரை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி அடிப்படையில் போலீசார் காரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அனாதையாக நின்றது

இந்தநிலையில் திப்பிறமலை பகுதியில் போலீஸ் கார் ஒன்று அனாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அது கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருடி எடுத்து செல்லப்பட்ட கார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் திப்பிறமலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காரை எடுத்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் நிலையத்தில் இருந்து கார் திருடப்பட்ட சம்பவம் கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story