சிறுவாச்சூர் கோவிலுக்கு நன்கொடை வசூலித்தவரின் வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்


சிறுவாச்சூர் கோவிலுக்கு நன்கொடை வசூலித்தவரின் வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலை சீரமைக்க பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்காக பொதுமக்களிடம் பெரும் தொகையை நன்கொடையாக வசூலித்து மோசடி செய்ததாக சென்னை ஆவடியை சேர்ந்த கார்த்திக் கோபிநாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ரூ.33 லட்சம்

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கார்த்திக் கோபிநாத் கூறியிருப்பதாவது:-

கோவிலை சீரமைக்க 'மிலாப் ஆப்' மூலம் நன்கொடை வசூலிக்கப்பட்டது. இந்த தொகை நேரடியாக கோவிலை சீரமைக்கும் ஸ்தபதி கணக்கிற்கு சென்றுவிடும். நன்கொடை வசூலிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அதில் ஒரு பைசா கூட என்னால் எடுக்க முடியாது. அனைத்து தொகையும் ஸ்தபதி கணக்கில் தான் இருக்கும். 2021-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி நன்கொடை கேட்டோம். 3 நாளில் 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் வசூலானது.

அதிகாரிக்கு தெரியும்

உடனே, இதற்கு மேல் நன்கொடை அனுப்ப வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டோம். நன்கொடை வசூலித்தது கோவில் செயல் அதிகாரிக்கு நன்கு தெரியும். அவர்தான் இந்த ஸ்தபதியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமல்ல, இந்த நன்கொடை கோவில் சீரமைப்புக்கு செலவு செய்ய அனுமதி கேட்டு ஒரு கடிதத்தை அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பவும் அவர் தான் கூறினார்.

ஆனால், நன்கொடை வசூலித்து பல மாதங்களுக்கு பின்னர், கோவில் செயல் அதிகாரி கொடுத்த புகாரின்படி என்னை கைது செய்துள்ளனர். அரசியல் ரீதியான நிர்ப்பந்தத்தால் போலீசார் என்னை கைது செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

உடந்தை யார்?

இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "சிதிலமடைந்த கோவில் புகைப்படத்தை வெளியிட்டு, மக்களிடம் அனுதாபம் தேடி மனுதாரர் பணம் வசூலித்துள்ளார். இதுபோல நன்கொடை வசூலிக்க அறநிலையத்துறைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இந்த மோசடியில் மனுதாரருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. அதனால், மனுதாரரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்.

கோவிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் மனுதாரரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் பெரும் தொகை வந்துள்ளது. 'மிலாப் ஆப்' மூலம் பணம் வசூலித்ததே பெரும் குற்றம். எனவே, அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

புகார் இல்லை

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "கோவிலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை ஏற்று பொதுமக்கள் நன்கொடை அளித்துள்ளனர். இந்த நன்கொடை பண பரிவர்த்தனை எல்லாம் வெளிப்படையாகவே நடந்துள்ளது. எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை.

நன்கொடை கொடுத்தவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. மனுதாரரும் கோவிலை சீரமைக்க தன் சொந்த பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். நன்கொடை தொகை எல்லாம் 'மிலாப் ஆப்பில்'தான் உள்ளது. நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை அந்த 'ஆப்' மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது அந்த பணம் மனுதாரரின் பொறுப்பில் இல்லை. எந்த ஒரு ஆரம்பக்கட்ட விசாரணையையும் நடத்தாமல், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனுதாரரை கைது செய்துள்ளனர்" என்று வாதிட்டார்.

தள்ளிவைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் தனிப்பட்ட வங்கி கணக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story