திருப்புவனம் படுகை அணை நிரம்பி செல்கிறது
பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகரித்து திருப்புவனம் படுகை அணை நிரம்பி செல்கிறது.
திருப்புவனம்,
பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகரித்து திருப்புவனம் படுகை அணை நிரம்பி செல்கிறது.
தண்ணீர் திறப்பு
திருப்புவனம் வைகை ஆற்றில் உயர்மட்ட பாலத்தின் அருகே படுகை அணை கட்டப்பட்டுள்ளது. இந்த படுகை அணையின் அருகே அருப்புக்கோட்டை, திருப்புவனம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் படுகை அணையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் மூலம் இப்பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து குடிநீர் திட்ட பணிகளுக்கும் நீர் ஆதாரம் தொடர்ந்து கிடைத்து வந்தது.
ஏற்கனவே தொடர் மழை மற்றும் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர் வரத்து இருந்து கொண்டே இருந்தது. தற்போது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து மேலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதன்காரணமாக வைகை ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வந்தும், திருப்புவனம் படுகை அணையை தாண்டி செல்கின்றது. முந்தைய காலக்கட்டங்களில் வைகை அணையில் தண்ணீர் திறந்தால் திருப்புவனம் பகுதிக்கு வர சுமார் ஐந்து நாட்களாகும். தற்போது தொடர் மழை மற்றும் வைகை ஆற்றில் அதிகஅளவில் ஈரத்தன்மை காணப்படுவதாலும் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இரண்டு நாட்களில் திருப்புவனம் படுகை அணையை தாண்டி செல்கின்றது. தண்ணீர் அதிகமாக செல்வதால் வைகை ஆற்றின் இரு கரைகளில் உள்ள தென்னந்தோப்புகள், விவசாய நிலங்கள், மற்றும் கிணற்று பகுதியில் நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும் தெரிய வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.