கழுகுமலையில் பேரூராட்சி அலுவலகத்தை பா.ஜ.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
கழுகுமலையில் செயல்அலுவலரை பணி செய்யவிடாமல் துணைத்தலைவர் தடுப்பதை கண்டித்து நேற்று பேரூராட்சி அலுவலகத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலையில் செயல்அலுவலரை பணி செய்யவிடாமல் துணைத்தலைவர் தடுப்பதை கண்டித்து நேற்று பேரூராட்சி அலுவலகத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரூராட்சி அலுவலர்
கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த பிரபா கடந்த ஆகஸ்டு மாதம் மகளின் பிரசவத்துக்காக விடுப்பில் சென்றார். பின்னர் விடுப்பு முடிந்து கலெக்டரிடம் பணி பொறுப்பேற்கும் ஆணை கடிதம் பெற்று மீண்டும் கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன் செயல்அலுவலர் அறையை பூட்டி சாவியை கொண்டு சென்றுவிட்டார்.
இதனால் செயல் அலுவலர் பிரபா தனது அலுவலக அறைக்கு வெளியில் காத்திருந்தார். அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பா.ஜனதா கட்சியினரிடம் தனது நிலையை குறித்து செயல் அலுவலர் கூறினார்.
முற்றுகை போராட்டம்
இதையடுத்து கயத்தாறு மேற்கு ஒன்றிய பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் மற்றும் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுக்கும் பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சிறப்பு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், சுப்புராஜ், முருகேசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் உள்பட 10 பேரை கழுகுமலை போலீசார் கைது செய்தனர்.
கலெக்டரிடம் புகார்
இப்பிரச்சினை குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா கூறுகையில், நான் விடுப்பில் சென்றபோது, எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் இந்த பஞ்சாயத்து நிர்வாகத்தை கூடுதலாக பொறுப்பு ஏற்று கவனித்து வந்தார். தற்போது எனது விடுமுறை பணிக்காலம் முடிந்து கலெக்டரிடம் பணி பொறுப்பு ஆணையை வாங்கிக் கொண்டு அலுவலகத்துக்கு வந்தேன். ஆனால், பேரூராட்சி துணைத்தலைவர் என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அவதூறாக பேசிவிட்டு சென்றார். இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உதவி இயக்குனரிடம் புகார் அளிக்க உள்ளேன்' என்றார்.
இந்த சம்பவம் கழுகுமலை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.