பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்


பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்
x

பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிர்களின் சுவை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உணவு தேடி மலையடிவாரப் பகுதி விளைநிலங்களுக்குள் நுழைகின்றன. இவ்வாறு நுழையும் காட்டுப்பன்றிகள் எளிதில் கிடைக்கும் விவசாயப் பயிர்களின் சுவைக்கு அடிமையாகி விட்டன. எனவே படிப்படியாக ஊருக்குள் ஊடுருவத் தொடங்கி விட்டது. இவ்வாறு நகரப் பகுதிகளுக்குள் பல கிலோ மீட்டர்கள் தூரம் ஊடுருவி உள்ள காட்டுப்பன்றிகள் மீண்டும் மலைப் பகுதிக்குத் திரும்பாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள புதர்களில் தங்கி விடுகின்றன.இதனால் விவசாயிகளுக்கு பல வகைகளில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மக்காச்சோளம், தென்னை, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களையும் காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்துகின்றன. கூட்டம் கூட்டமாக விளை நிலங்களுக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் தின்பதை விட பல மடங்கு மிதித்தும் தோண்டியும் சேதப்படுத்துகின்றன.அது மட்டுமல்லாமல் எதிரே வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் நாய்களையும் பலமாகத் தாக்குகின்றன. மனிதர்களையும் மூர்க்கமாக தாக்குகின்றன. காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட பயிர் சேதம், உயிர் சேதம் உள்ளிட்டவற்றுக்கு வனத்துறை மூலம் மிகக் குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்படுகிறது.அதே நேரத்தில் தங்கள் பயிர்களை பாதுகாக்கவும், தங்களை தற்காத்துக் கொள்ளவும் விவசாயிகள் முயற்சி செய்யும்போது சில வேளைகளில் காட்டுப்பன்றிகள் உயிரிழக்க நேரிடுகிறது.அது போன்ற சமயங்களில் விவசாயிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு வில்லனாக இருக்கும் காட்டுப்பன்றிகளை நிரந்தரமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுட்டுக் கொல்ல நடவடிக்கை

விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதுகாப்பதற்காக வயல் வெளிகளைச் சுற்றி சேலைகளால் வேலி அமைத்துள்ளனர்.அவை காற்றில் ஆடும் போது காட்டுப்பன்றிகளை அச்சுறுத்துவதால் அருகில் வருவதற்கு தயக்கம் காட்டுகிறது.ஆனாலும் அதனையும் மீறி பல நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது.

விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகள் பிரச்சினையும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது.எனவே ஊருக்குள் சுற்றித் திரியும் காட்டுப்பன்றிகளை வனவிலங்குகளாகக் கருதாமல் சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் சில மாவட்டங்களில் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனாலும் அதற்கென விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது.எனவே எளிமையான விதிகளுடன் காட்டுப்பன்றிகளைச் சுட அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



Next Story