கடலில் படகு கவிழ்ந்து அண்ணன்-தம்பி மாயம்


கடலில் படகு கவிழ்ந்து அண்ணன்-தம்பி என 2 மீனவர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கடலில் படகு கவிழ்ந்து அண்ணன்-தம்பி என 2 மீனவர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலில் படகு கவிழ்ந்தது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேசுவரி நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன்கள் முனியசாமி (வயது 30), அருண்குமார் (27), கசிஸ் சுமன் (22), மலைச்செல்வன் (19).

இவர்கள் 4 பேரும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மங்களேசுவரி நகர் பகுதியில் உள்ள கடலுக்கு படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். திரும்பி வந்தபோது பள்ளி முனை, அப்பாத்தீவுக்கு இடையே வந்த போது, திடீரென்று பலத்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் கடலில் படகு கவிழ்ந்தது.

2 பேர் கதி என்ன?

படகில் இருந்த 4 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அருண்குமாரும், கசிஸ்சுமனும் நீச்சல் அடித்து கரை திரும்பினர். மலைச்செல்வன் கடலில் தத்தளித்தார். அவரை காப்பாற்ற அண்ணன் முனியசாமி முயன்றார். இதில் இருவரும் கடலில் மூழ்கி மாயமானார்கள். அவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.

இதற்கிடையே கரை திரும்பிய இருவரும் இது குறித்து கீழக்கரை துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடலோர போலீசார், மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்ணன்-தம்பி கடலில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மாயமான முனியசாமிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.


Related Tags :
Next Story