எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்


எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:45 AM IST (Updated: 10 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பணியின் போது விபத்தில் இறந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்,

பணியின் போது விபத்தில் இறந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

குமரி மாவட்டம் இறச்சகுளம் ததேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). இவர் திரிபுரா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி அனுஷா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகலாந்து மாநில இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சதீஷ் உள்பட 32 வீரர்கள் பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ் நிலைதடுமாறி வக்கா என்ற இடத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சதீஷ், பஸ் ஓட்டி வந்த டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.

சொந்த ஊரில் அடக்கம்

சதீஷ் பலியான தகவலை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் சதீஷ் உடல் நேற்று விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் உடல் சொந்த ஊரான இறச்சகுளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு சதீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீல கண்ட ஜெகதீஷ், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Next Story