சேலத்தில் பரபரப்புபூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் சிறுவன் பிணம்கொலையா? போலீசார் விசாரணை


சேலத்தில் பரபரப்புபூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் சிறுவன் பிணம்கொலையா? போலீசார் விசாரணை
x
சேலம்

சேலத்தில் பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான். அவன் கொலை செய்யப்பட்டானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் பட்டறை

சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த ராமநாதபுரம் ரஷ்யா காலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28). இவர், அதே பகுதியில் மிலிட்டரி ரோட்டில் கார் பழுது பார்க்கும் மற்றும் பெயிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே, மாணிக்கத்தின் தங்கை ஹேமலதாவுக்கு திருமணம் என்பதால் கடந்த 22-ந் தேதி முதல் பட்டறையை பூட்டிவிட்டு சென்றார். இதனால் கார் பட்டறைக்கு யாரும் வேலைக்கு வரவில்லை.

இந்தநிலையில், விடுமுறை முடிந்து நேற்று இரவு 7 மணிக்கு மாணிக்கம் தனது கார் பட்டறைக்கு வந்து வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது, பட்டறையில் பழுது நீக்குவதற்காக கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியது.

சிறுவன் உடல் மீட்பு

இதனால் சந்தேகம் அடைந்த அவர், அந்த காரை திறந்து பார்த்தபோது, உள்ளே சுமார் 7 வயது சிறுவன் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காருக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுவன் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவன்? அவனது பெற்றோர் யார்? என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் சிறுவன் உடல் முழுவதும் அழுகிய நிலையில் கிடந்ததால் சிறுவனின் சாவு மர்மமாக உள்ளது. இதனிடையே சிறுவனின் உடலை போலீசார் கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

கார் பட்டறையில் பூட்டி நிற்கும் காருக்குள் சிறுவன் எப்படி வந்தான்? என்றும், அல்லது சிறுவனை யாரேனும் கடத்தி கொலை செய்து காருக்குள் உடலை போட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அம்மாப்பேட்டை, வீராணம், கிச்சிப்பாளையம், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் 7 வயது சிறுவன் யாரும் காணாமல் போய் உள்ளார்களா? என்றும், இதனால் காணாமல் போன சிறுவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, பூட்டி கிடந்த கார் பட்டறையில் சிறுவர்கள் விளையாடுவதற்கு சென்றிருக்கலாம் எனவும், அப்படி விளையாடியபோது, காருக்குள் இந்த சிறுவன் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் இறந்து இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலத்தில் கார் பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் 7 வயது சிறுவனின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story