மஞ்சுவிரட்டில் இறந்த போலீஸ்காரர் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்
புதுக்கோட்டை அருகே மஞ்சுவிரட்டில் இறந்த போலீஸ்காரர் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. போலீஸ்காரர் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உள்ளிட்ட போலீசார் சுமந்து சென்றனர்.
போலீஸ்காரர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே கல்லூா் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இந்த மஞ்சுவிரட்டில் மீமிசல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் (வயது 31) என்பவர் பாதுகாப்பு பணி மேற்கொண்டார். இவர் மாற்று பணி நிமித்தமாக இங்கு வந்திருந்தார்.
அப்போது மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த சிலர் மஞ்சுவிரட்டு திடலுக்குள் சென்றனர். இதனைக் கண்ட போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் அவர்களை அப்புறப்படுத்துவதற்காக அங்கு நின்றிருந்த சரக்கு வேனில் இருந்து இறங்கி அவர்களை திடலில் இருந்து வெளியே செல்லும்படி கூறினார்.
அப்போது அங்கு ஓடிவந்த ஒரு காளை திடீரென நவநீதகிருஷ்ணன் நெஞ்சில் முட்டி தூக்கி எறிந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
மனைவிக்கு ஆறுதல்
இதையடுத்து போலீஸ்காரரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் மஞ்சுவிரட்டில் போலீஸ்காரர்களுக்கு முறையாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் நவநீதகிருஷ்ணன் இறந்திருக்க மாட்டார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மறியலில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு, நவநீதகிருஷ்ணன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த நவநீதகிருஷ்ணன் மனைவி சபரிக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆறுதல் கூறினார். சபரி அறந்தாங்கி மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
உடலை சுமந்த போலீஸ் சூப்பிரண்டு
இதைத்ெதாடர்ந்து மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நவநீதகிருஷ்ணன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி எல்.என்.புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் நவநீதகிருஷ்ணன் உடல் எல்.என்.புரத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மயானம்வரை தோளில் சுமந்து சென்றார்.
21 குண்டுகள் முழங்க உடல் தகனம்
அவருடன் அறந்தாங்கி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்ளிட்ட போலீசாரும் நவநீதகிருஷ்ணன் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்றனர்.
பின்னர் மயானத்தில் நவநீதகிருஷ்ணன் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து நவநீதகிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அந்த கிராமத்தினர் சோகமயமாக நின்றிருந்தனர்.