தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த இளம்பெண் உடல் கருகி பலி
கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த இளம்பெண் உடல்கருகி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்,
கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த இளம்பெண் உடல்கருகி பரிதாபமாக இறந்தார்.
குடிப்பழக்கம்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை வடக்குத்தெருவில் வசிப்பவர் பழனிசாமி (வயது 65). இவரது மகள் முத்துமாரிக்கும் (30), ஈரக்கஞ்சன் என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஈரக்கஞ்சன் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்வேன் எனக்கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளீச்சிங் பவுடரை முத்துமாரி குடித்துள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் காப்பாற்றப்பட்டார்.
பெண் சாவு
அதன்பின்பும் ஈரக்கஞ்சன் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்க இம்முறை தீக்குளிப்பு மிரட்டல் விட நினைத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு ஈரக்கஞ்சன் மது குடித்து விட்டு வந்த நிலையில் முத்துமாரி அவரை மிரட்ட, தனது உடலில், 'தின்னரை' ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறி இருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துமாரியின் உடலில் தீப்பிடித்தது.
இதில் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முத்துமாரி, சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி முத்துமாரியின் தந்தை பழனிசாமி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.