ஆட்டோவில் இருந்து தவறிவிழுந்து சிறுவன் பலி
ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற போது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானான்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற போது ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானான்.
ஏலகிரி மலைக்கு சுற்றுலா
வேலூரை அடுத்த செதுவாலை புதுமனை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சாண்டிலியன் (வயது 37). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்களை ஏலகிரி மலைக்கு நேற்று காலை வேலூரில் இருந்து தனது ஆட்டோவில் அழைத்து சென்றார்.
வாணியம்பாடி- திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி அருகே மண்டலவாடி கூட்டுரோடு சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது சாண்டில்யனின் மகன் அரிஹரன் (7) திடீரென ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தான்.
சிறுவன் சாவு
உடனே சாண்டல்யன் அதே ஆட்டோவில் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் அரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக தந்தை சாண்டியலின் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீபாவளி விடுமுறையில் சுற்றுலா சென்றபோது சிறுவன் ஆட்டோவில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.