குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான்
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முகமது உசேன். இவரது மகன் முகமது பாகிஸ் (வயது 10). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் முகமது பாகிஸ் இனாம்குளத்தூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெற்றோருடன் வந்து இருந்தான். இந்த நிலையில் விளையாடிவிட்டு வருவதாக கூறி, அப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கி குளித்துள்ளான். ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். இதை கண்ட அப்பகுதியினர் முகமது பாகிஸை மீட்டு இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.