டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியானான்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பிரகாஷ் (வயது 9). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் முருகேசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரகாஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். இந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது வயலில் உழுவதற்காக டிராக்டரை எடுத்தபோது பிரகாஷ் தானும் வருவதாக கூறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து சிறுவனை ஏற்றிக்கொண்டு வயலுக்கு சென்ற முருகேசன் தனது அருகே பிரகாஷை உட்கார வைத்துக் கொண்டு உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டரில் அமர்ந்து இருந்த பிரகாஷ் தவறி டிராக்டரின் சக்கரத்தில் விழுந்தான். இதில் சக்கரம் ஏறி இறங்கியதில் அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.