போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு சிறுவன் தப்பி ஓட்டம்


போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு சிறுவன் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூர்நோக்கு இல்லத்துக்கு பஸ்சில் அழைத்துச் சென்றபோது போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு சிறுவன் தப்பி ஓடிவிட்டான்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது பல்வேறு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 36 வழக்குகள் உள்ளது. இவன், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்டு, மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான். இதனிடையே சிறுவனை மதுரையில் இருந்து செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்ற திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவிட்டது.

பஸ்சில் அழைத்துச் சென்றனர்

அதன்படி பழனி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் அந்த சிறுவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு செல்லும் அரசு விரைவு பஸ்சில் ஏறினர். பயணிகள் இரவு உணவு சாப்பிடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு 10.30 மணிக்கு பஸ் நிறுத்தப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு கார்த்திக் ஆகியோர் சிறுவனுடன் சாப்பிட்டனர்.

சிறுவன் தப்பி ஓட்டம்

அங்கு அனைவரும் சாப்பிட்டதும் பஸ் புறப்பட தயாரானது. சிறுவனுடன் போலீசார் பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது சிறுவன், 2 போலீஸ்காரர்களையும் தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே ஏட்டு கார்த்திக், சிறுவனின் சட்டையை பிடித்து இழுத்தார். இதில் சுதாரித்துக்கொண்ட சிறுவன், சட்டையை கழற்றிவிட்டு வேகமாக இருள் சூழ்ந்த பகுதிக்குள் ஓடி மறைந்து விட்டான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் உள்ளூர் போலீஸ் உதவியுடன் இரவு முழுவதும் சிறுவனை தேடினர். ஆனால் அவன் கிடைக்கவில்லை.

போலீஸ் வலைவீச்சு

இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story