காதலன் வீட்டில் புகுந்து பொருட்கள் சூறை; காதலியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு


காதலன் வீட்டில் புகுந்து பொருட்கள் சூறை; காதலியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x

நாங்குநேரி அருகே காதலன் வீட்டில் புகுந்து பொருட்களை சூறையாடியதாக காதலியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள பனையன்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சுடலைக்கண்ணு என்ற அந்தோணி மார்டின் (வயது 27). இவர் பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரும், பாலாமடையை சேர்ந்த ஸ்ரீதர் என்ற சுடலைமுத்து என்பவரின் மகள் வெள்ளத்தாயும் (22) கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு சுடலைக்கண்ணு, பாலாமடையில் உள்ள வெள்ளத்தாய் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள, அவரது தந்தை ஸ்ரீதரிடம் பெண் கேட்டார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி காதலர்கள் சுடலைக்கண்ணு, வெள்ளத்தாய் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி சென்று விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர், சுடலைக்கண்ணுவின் தாயார் லட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன லட்சுமி, பனையன்குளத்தில் இருந்து வெளியேறி, திருச்செந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையே ஸ்ரீதர், அவரது மனைவி சுப்புலட்சுமி, மகன் சுடலைமுத்து, மருமகன்கள் கால்வாயை சேர்ந்த அருணாசலம், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சப்பாணி முத்து ஆகிய 5 பேரும், பனையன்குளத்தில் உள்ள சுடலைக்கண்ணு வீட்டுக்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து லட்சுமி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீதர் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே காதலர்களை போலீசார் நேற்று மீட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story