ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நர்சை தாக்கிய காதலன்
திருவட்டாரில் செல்போனை எடுத்து பேசாததால் நர்சை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்கிய காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவட்டார்:
திருவட்டாரில் செல்போனை எடுத்து பேசாததால் நர்சை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து தாக்கிய காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.
காதலர்கள்
திருவட்டார் அருகே உள்ள முதலாறு பகுதிைய சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அங்கு வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆண் நர்சாக பணியாற்றினார். ஒரே ஆஸ்பத்திரியில் பணிபுரிந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.
இந்தநிலையில் சில மாதங்களில் வாலிபர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்பு இளம்பெண் திருவட்டாரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலையில் சேர்ந்தார். இதற்கிடைேய வாலிபர் இளம்பெண்ணின் வீட்டில் முறையாக பெண் கேட்டார். இதையடுத்து இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் நிச்சயதார்த்தம் நடத்தும் வேலைகளை மேற்கொண்டு வந்தனர்.
வேலைக்கு செல்ல தடை
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு வாலிபர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அவர் தனது காதலியிடம், 'இனிமேல் நீ வேலைக்குச்செல்ல வேண்டாம்' என கூறினார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் செல்போனில் தனது காதலியை தொடர்பு ெகாண்டார். அப்போது அவர் செல்போனை எடுத்து பேசவில்ைல.
இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தனது 2 நண்பர்களையும் அழைத்து கொண்டு திருவட்டாரில் இளம்பெண் நர்சாக வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
திடீர் தாக்குதல்
அங்கு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நர்சிடம் 'நான் போன் செய்தால் எடுக்க மாட்டாயா?' எனக்கேட்டு, அவரது கன்னத்தில் 'பளார்' என்று அடித்தார். இதில் அவரது காதில் கிடந்த கம்மல் உடைந்து தெறித்தது. இந்த சம்பவத்தால் நிலை குலைந்த இளம்ெபண் கதறி அழுதார். இதற்கிைடயே அங்கு நின்று கொண்டிருந்த சிலர் வாலிபரை பிடித்து தாக்க தொடங்கினர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த திருவட்டார் போலீசார் அந்த வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இளம்பெண்ணின் தாயார் ஆவேசம்
தொடர்ந்து இளம்பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். இந்தநிலையில் 'போனை எடுக்க வில்லை என்று எனது மகளை அடித்தவருக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்?' என இளம்பெண்ணின் தாயார் ஆவேசமாக பேசினார். அப்போது, 'போன் எடுக்காத வருத்தத்தில் இவ்வாறு செய்துவிட்டேன்' என வாலிபர் கண்ணீர் விட்டபடி கூறினார்.
பின்னர் இரு தரப்பினரும் போலீசில் வழக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.