வாலிபரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்


வாலிபரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
x

எருதுவிடும் விழாவில் இறந்த வாலிபரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

வாலிபர் பலி

நாட்டறம்பள்ளியை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த தவுலத் என்பவரின் மகன் முஷரப் (வயது 19). இவர் கல்நார்சம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற எருது விடும் திருவிழாவின் போது காயமடைந்து இறந்தார். போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் இறந்ததாகக்கூறி போலீசாரை முற்றுகையிட்டதுடன் கல்வீசிதாக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இறந்த முஷாரப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு நேற்று பிரேத பரிசோதனை செய்து, முஷாரப்பின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடல் அடக்கம்

பின்னர் முஷாரப்பின் உடல் பெரிய கம்மியம்பட்டு கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காதவாறு திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட சுமார் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் முஷாரப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு தேவராஜி எம்.எல்.ஏ. ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

பின்னர் முஷராப்பின் உடலை அடக்கம் செய்ய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர். சுடுகாடு வரை தேவராஜி எம்.எல்.ஏ. சுமந்து சென்றார். அங்கு வாலிபரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story