"பெண் போலீஸ் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம் என் மனதில் நீங்காமல் நிற்கிறது"
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பெண் போலீஸ் ரேவதியின் வாக்குமூலம் என் மனதில் நீங்காமல் நிற்கிறது என்று மதுரை கோர்ட்டில் ஆஜராகி மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பெண் போலீஸ் ரேவதியின் வாக்குமூலம் என் மனதில் நீங்காமல் நிற்கிறது என்று மதுரை கோர்ட்டில் ஆஜராகி மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார்.
தந்தை-மகன் கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களை போலீசார் கடுமையாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர்கள், அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.பி.ஐ. இரட்டைக்கொலை வழக்கு பதிவு செய்தது.
இந்த கொலை வழக்கில் சாத்தான்குளத்தின் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பொறுப்பு நீதிபதி
இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
இந்த வழக்கில் சாட்சிகளாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் சம்பவத்தின்போது பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா ஆகியோரும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட பலரும் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் மதுரை கோர்ட்டில் சாட்சியம் அளித்துவிட்டனர்.
இந்தநிலையில் இந்த கோர்ட்டு நீதிபதி நாகலட்சுமி கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதன்விசாரணை நிலுவையில் இருந்தது. இந்தநிலையில் இந்த கோர்ட்டின் பொறுப்பு நீதிபதியாக சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தமிழரசி நியமிக்கப்பட்டார். அவர் முன்பு சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
மாஜிஸ்திரேட்டு ஆஜர்
அப்போது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவரும், தற்போது சிதம்பரம் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டாக பணிபுரியும் சக்திவேல் ஆஜரானார். அவர், நீதிபதி தமிழரசியிடம் சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர் கூறிய பல்வேறு தகவல்களுக்கு, இந்த வழக்கில் கைதாகி இருக்கும் 9 போலீசார் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் 2-வது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாஜிஸ்திரேட்டு சக்திவேல் நேற்று அளித்த சாட்சியம் குறித்து கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்ததும்,, முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் தூத்துக்குடி மாவட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
ரேவதி வாக்குமூலம்
அப்போது அந்த வழக்கில் பல்வேறு சாட்சிகளும் சேர்க்கப்பட்டன. அதில் அப்போதைய பெண் போலீஸ் ரேவதி உள்ளிட்டோரும் சாட்சிகளாக இருந்தனர். பெண் போலீஸ் ரேவதி, தூத்துக்குடி மாவட்ட மாஜிஸ்திரேட்டு சக்திவேல் முன்பு ஆஜராகி, ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அப்போது சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கடுமையாக தாக்கிய சம்பவத்தை தன்னுடைய மனசாட்சிக்கு விரோதம் இன்றி உண்மையை மட்டுமே தெரிவிக்கிறேன் என்று கூறி, ரேவதி சாட்சியம் அளித்தார்.
கோர்ட்டு வளாகத்தில் பூட்டிய அறைக்குள் அவரிடம் சாட்சியம் பெற்ற சம்பவம் தற்போதும் தன் மனதில் நீங்காமல் நிற்கிறது என்று மாஜிஸ்திரேட்டு சக்திவேல், மதுரை கோர்ட்டில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.