புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை


புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளி கிராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 24), தொழிலாளி. இவருடைய மனைவி கவிரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. சம்பவத்தன்று தனசேகர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு மாடி படிக்கட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதைபார்த்த அவரது உறவினர்கள் தனசேகரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, தனசேகர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் தனசேகரை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தாக்கி கொலை செய்ததாகவும், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவர்களை கைது செய்யக்கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2 பேர் கைது

அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து தனசேகரை அடித்து கொன்றதாக விக்கி என்கிற விக்னேஷ் (24), விஜய் (22) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story