கட்டிட மேஸ்திரி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கட்டிட மேஸ்திரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரபு (வயது 40), தாயார் முனியம்மாளுடன் மனு அளிக்க வந்தார்.
குறைதீர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு பிரபு திடீரென மறைத்து எடுத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்து விசாரித்தனர்.
அப்போது பிரபு கூறுகையில், எனக்கு உடன்பிறந்த 4 சகோதரிகள் உள்ளனர். தாயார் முனியம்மாள் பெயரில் உள்ள 54 சென்ட் நிலம் மற்றும் வீடு உள்ளிட்டவற்றை சகோதரிகளுக்கு தலா 3.5 சென்ட் பிரித்து கொடுப்பது என்றும், தாயை கவனிப்பதால் மீதமுள்ள நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவது என்றும் அனைவரும் கூடிபேசி தீர்மானித்தோம். ஆனால் 2 சகோதரிகள் நிலத்தரகர் ஒருவருடன் சேர்ந்து என்னையும், தாயையும் ஏமாற்றி, அவர்கள் பெயருக்கு கூடுதல் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொண்டனர். இதற்கு உடந்தையாக இருந்த நிலத்தரகருக்கு 10 சென்ட் நிலம் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
தீக்குளிக்க முயற்சி
இதனை அறிந்து இதுபற்றி அவர்களிடம் கேட்டதற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை எங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்துவிட்டோம். இனிமேல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றுகூறி வீட்டை காலி செய்யும்படி மிரட்டல் விடுக்கிறார்கள்.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் விரக்தி அடைந்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றேன் என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பிரபுவை மனு அளிக்கும்படி கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எந்த பிரச்சினைக்கும் தீக்குளிப்பது தீர்வு ஆகாது. போலீஸ் நிலையத்தில் நிலமோசடிக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டால், கோர்ட்டில் முறையீடு செய்து தீர்வு காண வேண்டும். இதற்காக தீக்குளிக்க கூடாது என்று அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
குறைதீர்வு கூட்டத்தில் கட்டிட மேஸ்திரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.