சாலையில் பஸ் டிரைவர், கண்டக்டர்-பயணி கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு
நிறுத்த சொன்ன இடத்தில் பஸ்சை நிறுத்தாததால் ஏற்பட்ட தகராறில், பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணி ஆகியோர் சாலையில் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாநகர பஸ் ஒன்று அண்ணா சதுக்கம் நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் தீவுத்திடல் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்துமாறு கண்டக்டரிடம் டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் பஸ் டிரைவர், தீவுத்திடல் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தவில்லை.
மாறாக போர் நினைவுச்சின்னம் அருகே சிக்னலில் பஸ்சை நிறுத்திய டிரைவர், அந்த பயணியை இறங்க சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணி, பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்பினரும் வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
பரபரப்பு
பஸ் டிரைவரை சாலையில் போட்டு, பயணி கடுமையாக தாக்கினார். இதில் டிரைவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதையடுத்து டிரைவர் தனது கையில் கிடைத்த செடியின் கிளைகளை கொண்டு பயணியை தாக்கினார். பின்னர் டிரைவரும், கண்டக்டரும் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் பஸ் நிறுத்தப்பட்டிருந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ் டிரைவர் மற்றும் பயணி இடையே நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.