தாறுமாறாக ஓடிய பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பரிதாப சாவு
மத்தூர் அருகே அரசு பஸ் டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில் கட்டிட மேஸ்திரி பலியானார்.
மத்தூர்
மத்தூர் அருகே அரசு பஸ் டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில் கட்டிட மேஸ்திரி பலியானார்.
டிரைவருக்கு நெஞ்சுவலி
கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலைக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சை திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் பழனி(வயது53). ஓட்டினார். செங்கத்தை சேர்ந்த சிவக்குமார் (45) என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் மத்தூர் அருகே காலை வந்தபோது டிரைவர் பழனிக்கு திடீரென ெநஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஸ்சை நிறுத்த முயன்றார். வலி தாங்க முடியாமல் அவர் இருக்கையில் இருந்தவாறே ஸ்டியரிங் மீது சாய்ந்தார். இதனால் பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியது.
வாகனங்கள் மீது மோதியது
இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் பஸ்சின் பிரேக்கை அழுத்தி நிறுத்த முயன்றார். அப்போது சாலையோரம் சைக்கிளுடன் நின்று இருந்த நாகனம்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கமலநாதன்(60) என்பவர் மீது பஸ் மோதியது. இருப்பினும் பஸ் கட்டுப்பாட்டை இழந்து டீ கடை முன்பு நிறுத்தி இருந்த 5 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி நின்றது.
இந்த விபத்தில் கமலநாதன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கமலநாதன் மற்றும் பஸ் டிரைவர் பழனி ஆகிய 2 பேரையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கட்டிட மேஸ்திரி சாவு
ஆனால் கமலநாதன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் டிரைவர் பழனிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து வந்து கமலநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.