பஸ் நிலையம் சாலையை அகலப்படுத்த வேண்டும்
பஸ் நிலையம் சாலையை அகலப்படுத்த வேண்டும்
வடபாதிமங்கலத்தில் பஸ் நிலையம் சாைலயை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுகலான சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் 100 ஆண்டு காலமாக பஸ் நிலையம் இருந்து வருகிறது. இங்கு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், கோட்டூர், மாவூர் போன்ற ஊர்களுக்கும், ஏனைய கிராமப்புறங்களுக்கும் சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஏற்ற வகையில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்லக்கூடிய சாலை பள்ளங்களாகவும், மிகவும் குறுகலான சாலையை போன்றும் காணப்படுகிறது.
அகலப்படுத்தி தர வேண்டும்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தேர் நான்கு வீதிகளிலும் தாராளமாக சென்று வரக்கூடிய சாலைகளில், பஸ் நிலையம் சாலையும் அகலமாகவே இருந்தது. ஆனால் நாளடைவில் தேரோட்டம் நடைபெறாததால் பஸ் நிலையம் சாலை பல இடங்களில் ஆக்கிரமிப்பு சாலையாக மாறியது. அதன்பிறகு குறுகலான சாலையாக மாறியது. தற்போது பஸ் நிலையம் உள்ள சாலையில் பஸ் புறப்படும் இடத்தில் இருந்து பஸ் வெளியே செல்லும் சாலை மிகவும் குறுகலாகவே உள்ளது.
இதனால் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் மிகவும் சிரமம் அடைந்து செல்ல வேண்டிய நிலையே நீடிப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே வடபாதிமங்கலம் பஸ் நிலையம் சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.