பிரதமருக்கு கம்பீரத்தை தந்த கேமோ ஆடைகள் திருப்பூரில் தயாரானது


பிரதமருக்கு கம்பீரத்தை தந்த கேமோ ஆடைகள் திருப்பூரில் தயாரானது
x

பிரதமருக்கு கம்பீரத்தை தந்த கேமோ ஆடைகள் திருப்பூரில் தயாரானது

திருப்பூர்

திருப்பூர்

முதுமலை பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு கம்பீர தோற்றத்தை அளித்த கேமோ டி-சர்ட் திருப்பூரில் தயாரானதாகும். இதனால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரதமர் அணிந்த டி-சர்ட்

பிரதமர் மோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்று அங்கு வாகனம் மூலம் சவாரி மேற்கொண்டு இயற்கை அழகை ரசித்தார். வனவிலங்குகளையும் பைனாகுலர் மூலம் பார்வையிட்டார். புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்ற பிரதமர், தாயில்லாத குட்டி யானைகளை பராமரித்த பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்டினார். அவர்களிடம் கலந்துரையாடினார்.

கம்பீர தோற்றம்

பிரதமர் கம்பீரதோற்றத்துடன் ராணுவ வீரரைப்போல் கேமோ டி-சர்ட், பேண்ட், தொப்பி அணிந்து காட்சியளித்தார். பிரதமரின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் அணிந்திருந்த கேமோ பிளாஜ் டி-சர்ட் திருப்பூர் சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எஸ்.சி.எம்.கார்மெண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். ராணுவ வீரரை போன்ற பிரதமரின் புகைப்படங்கள் திருப்பூருக்கு பெருமை என்ற பெருமிதத்துடன் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் எஸ்.சி.எம். நிறுவன நிர்வாக இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:-

முதுமலைக்கு பிரதமர் வந்தபோது, எங்கள் எஸ்.சி.எம். குழுமத்தில் தயாரிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்தது பெருமையாக உள்ளது. இந்த டி-சர்ட் கேமோ பிளாஜ் பிரிண்ட் வகையாகும். இந்த டி-சர்ட் எளிதில் அழுக்கு ஒட்டாது. மலையேறும் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த டி-சர்ட் உகந்ததாகும். எங்களுக்கு ஆர்டர் வழங்கும் பையர் நிறுவனம் டெகத்லான் ஷோரூமை இந்தியாவில் 100 இடங்களில் அமைத்துள்ளனர். அதன் தலைமையிடம் பெங்களூருவில் உள்ளது. அந்த ஷோரூமுக்கு பிரதமரின் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் குழுவினர் சென்று 5 வகையான ஆடைகளை தேர்வு செய்துள்ளனர். அதில் எங்கள் நிறுவனம் தயாரித்த கேமோ பிளாஜ் டி-சர்டை இறுதி செய்து பிரதமருக்கு கொடுத்துள்ளனர்.

ஆர்டர் அதிகரிக்கும்

இந்த டி-சர்ட் மிகவும் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும்.குளிர் மற்றும் கோடை காலத்தில் அணிவதற்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்பட்டது. இந்த டி-சர்டை அணியும்போது கம்பீர தோற்றம் கிடைக்கும். எங்கள் நிறுவனம் தயாரித்த ஆடையை பிரதமர் அணிந்து கொண்டதற்கு எஸ்.சி.எம். கார்மெண்ட், சென்னை சில்க்ஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே இந்த டி-சர்ட்டுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பிரதமர் அணிந்ததால் இந்த ஆடைக்கான வரவேற்பு இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் எங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிக வரவேற்பு

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கேமோ ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த டி-சர்ட்டுகளை விரும்பி அணிய தொடங்கி இருக்கிறார்கள். பிரதமர் மோடி திருப்பூரில் தயாரித்த கேமோ ஆடையை அணிந்து கம்பீர தோற்றத்துடன் மக்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார். இளைஞர்கள் மத்தியில் இந்த ஆடைகளுக்கு அதிகமான வரவேற்பு கிடைக்கும். கேமோ ஆடை தயாரிப்புக்கான ஆர்டரும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Related Tags :
Next Story