ஊட்டி அருகே மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ஊட்டி அருகே கல்லட்டி மலைபாதையில் சுற்றுலா பயணிகள் வந்த கார் திடீரென தீப்பற்றி ஏரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சரவணன் என்பவர் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு சரவணன் தனது நண்பர்களான வினித், சுரேஷ், சரண்பாபு, பிரசந்த் ஆகிய 4 பேருடன் ஊட்டியை சுற்றி பார்க்க வாடகை காரில் மசினகுடி வழியாக கல்லட்டி மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் கலை 8.40 மணியளவில் 4-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது காரின் முன்பக்கத்தில் இருந்து லேசாக தீயுடன் புகை வந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென அதிகரித்து கார் முழுவதும் எரிய ஆரம்பித்தது.
இதை தொடர்ந்து காருக்குள் இருந்தவர்கள் உஷார் அடைந்து உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். தீ கொளுந்து விட்டு எரிந்ததில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.
இந்த சம்பவம் குறித்து புதுமந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.