கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு
திருச்சியில் பெட்ரோல் நிரப்ப சென்றபோது, கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறையில் பேக்கரி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சியில் பெட்ரோல் நிரப்ப சென்றபோது, கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறையில் பேக்கரி குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
காரில் தீ
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவர் நேற்று காலை தனது காரில் கே.கே.நகர் சென்றார். பின்னர் அங்கிருந்து காலை 11.15 மணி அளவில் கருமண்டபம் நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் அரிஸ்டோ மேம்பாலத்தின் கீழ் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு பெட்ரோல் நிரப்ப அவர் சென்றார். அப்போது காரில் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது இப்ராகிம் உடனடியாக பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து காரை ஓட்டிக்கொண்டு எதிரே உள்ள சாலையில் ஓரமாக நிறுத்தினார். அதற்குள், காரின் முன் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிய தொடங்கியது.
உடனே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் தீத்தடுப்பு உபகரணங்களை கொண்டு தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி (போக்குவரத்து) சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் மேலும் தீ பரவாமல் இருப்பதற்காக காரின் முன் பகுதி முழுவதும் நீரை பீய்ச்சி அடித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை
மணப்பாறை மதுரை சாலையில் தனியார் பேக்கரி உள்ளது. இதன் அருகே பேக்கரிக்கு தேவையான கேக் உள்ளிட்டவைகள் தயாரிப்பதற்கான குடோன் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அந்த குடோனில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் அடுப்பிற்கு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
தொடர்ந்து தீ பரவியது
இதனால் குடோனில் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும்இந்த விபத்தில் பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ள பகுதியில் நடந்த இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.