10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து2 பெண்கள் பலி; 5 பேர் படுகாயம்


பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற போது 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 2 பெண்கள் பலியானார்கள். குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற போது 10 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் 2 பெண்கள் பலியானார்கள். குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆரல்வாய்மொழி அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பொங்கல் சீர்வரிசை கொடுக்க...

குமரி மாவட்டம் பூதப்பாண்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியபிள்ளை. இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி உலகம்மாள் (வயது 75). ஏற்கனவே சுப்பிரமணிய பிள்ளை இறந்து விட்டார். இவர்களுக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம்பிள்ளை என 3 மகன்கள் உள்ளனர்.

இதில் பாலசுந்தரம்பிள்ளையின் மகள் உமாவை சுசீந்திரம் அருகே காக்கமூரில் உள்ள கண்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். உமாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இருவரும் மஸ்கட்டில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் உமாவுக்கு தலை பொங்கல் என்பதால் காக்கமூருக்கு சென்று பொங்கல் சீர்வரிசை கொடுக்க உலகம்மாள் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

காரில் புறப்பட்டனர்

அதைத்தொடர்ந்து பாத்திரங்கள், மளிகை சாமான்கள், கிழங்கு உள்ளிட்ட அனைத்து பொருட்களுடன் சொகுசு காரில் நேற்று காலையில் புறப்பட்டனர்.

காரில் உமாவின் தாய் சுபா (55), பாட்டி உலகம்மாள், நாகராஜனின் மனைவி பிரேமா (45), கோலப்பன் மனைவி சுப்புலெட்சுமி (55). உறவினரான அதே பகுதியை சேர்ந்த தளவாய்சுந்தரத்தின் மனைவி உமா (50), சுப்புலெட்சுமியின் பேத்தி சிபிக் ஷா (2) ஆகியோர் இருந்தனர். இந்த காரை அழகியபாண்டியபுரம் இடைகோடை சேர்ந்த ஜெகநாதன் (28) என்பவர் ஓட்டினார்.

கார் கவிழ்ந்தது

பூதப்பாண்டியில் இருந்து புறப்பட்ட கார் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் சாலை வழியாக தாழக்குடி நோக்கி சென்றது. இந்த பகுதியில் ஒருபக்கம் கால்வாய், மறுபக்கம் 10 அடி பள்ளத்தில் வயல்வெளி உள்ளது. இந்தநிலையில் அந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை கடந்து சென்ற போது திடீரென்று கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதனைத்தொடர்ந்து பலமுறை உருண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என்று அபய குரல் எழுப்பினர். இதை பார்த்தவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். உடனே பூதப்பாண்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

2 பெண்கள் பலி

அப்போது விபத்தில் உலகம்மாள், உமா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்த நிலையில் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காரில் வந்த மற்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் பலியான உமாவுக்கு 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.விபத்து நடந்த இடம் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது. இதனால் பூதப்பாண்டி போலீசார் மற்ற விவரங்களை ஆரல்வாய்மொழி போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் சீர்வரிசை கொண்டு சென்ற போது கார் பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story