சாலைஓர பள்ளத்தில் கார் கவிழ்ந்து கட்டிட காண்டிராக்டர் பலி


எட்டயபுரம் அருகே கார் சாலைஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே கார் சாலைஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு...

சென்னை சூரிய அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நரசிம்மன் மகன் வேணுகோபால் (வயது 74). இவருடன் நண்பர்களான ஆரணியை சேர்ந்த செந்தில்குமார்(40), ராஜேந்திரன், முருகேசன், கட்டிட காண்டிராக்டர்களான ஞானவேல்(48), தினகரன்(47) ஆகிய 6 பேரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மாலை 3 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

காண்டிராக்டர் பலி

காரை தினகரன் ஓட்டி சென்றார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை அருகே ெசன்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் சிறிது தூரம் தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் சாலைஓரத்திலுள்ள பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்த காண்டிராக்டர் ஞானவேல் ரத்த வெள்ளத்தில் பலியானார். மற்ற 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான ஞானவேல் உடலை போலீசார் கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story