வாய்க்காலில் கார் பாய்ந்தது
வாய்க்காலில் கார் பாய்ந்தது
நன்னிலம் அருகே வாய்க்காலில் கார் பாய்ந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சாமி கும்பிட சென்றனர்
திருவாரூர் அருகே உள்ள எண்கன் மலையூர் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 67). இவரது மனைவி ருக்மணி(59), மகன் இதுநந்தவர்மன்(37), ருக்மணியின் தாயார் கஸ்தூரி(90) ஆகியோர் நேற்று காலை வீட்டில் இருந்து காரில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். காைர புஷ்பராஜ் ஓட்டினார்.
வாய்க்காலில் கார் பாய்ந்தது
திருவாரூர்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் காக்கா கோட்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பின்னர் காக்காகோட்டூர் பாசன வாய்க்காலில் பாய்ந்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வாலிபருக்கு கால்முறிவு
மோட்டார் சைக்கிளில் வந்த திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன்(25) என்பவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தி்ருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
தற்போது விபத்து நடந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கார் குளத்தில் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று வாய்க்காலில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே ஆபத்தான இடங்களில் உடனடியாக தடுப்பு சுவர்கள் மற்றும் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.