கார் தீயில் எரிந்து நாசம்
கார் தீயில் எரிந்து நாசமானது
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை உள்ளது. இங்கு பழுதடைந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது பற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தீயில் எரிந்த கார் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரது கார் என தெரியவந்தது. இவர் தனது பழுதான காரை பழுதுநீக்கம் செய்வதற்காக விட்டு இருந்தார். அதிக செலவு ஏற்படும் என்பதால் பழுதுநீக்கப்படாமல் கடந்த 2 வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கார் நிறுத்தி இருந்த இடத்தை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. அதில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்ததில் கார் எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.