சரக்கு லாரி பள்ளத்தில் சிக்கியது


சரக்கு லாரி பள்ளத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்து காணப்படும் கூடலூர்-கேரளா சாலையில் உள்ள பள்ளத்தில் சரக்கு லாரி சிக்கியது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

பழுதடைந்து காணப்படும் கூடலூர்-கேரளா சாலையில் உள்ள பள்ளத்தில் சரக்கு லாரி சிக்கியது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குண்டும், குழியுமான சாலை

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. தமிழகம்-கேரளாவை இணைக்கும் சாலை என்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனால், தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வில்லை.

இதனால் குண்டும், குழியுமாக மாறி உள்ளதால், நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சரக்கு வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது மினி லாரி டயர் கழன்று விழுந்தது. நேற்று மதியம் 12.30 மணிக்கு கேரளாவில் இருந்து மைசூருக்கு பிளைவுட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது கூடலூர் கோழிபாலம் கடைவீதியை கடந்து வளைவில் திரும்பும் போது சாலையில் உள்ள பள்ளத்தில் லாரி சிக்கியது. தொடர்ந்து லாரியை வேகமாக ஓட்ட டிரைவர் முயன்ற போது, நடுரோட்டில் கவிழும் அபாயம் காணப்பட்டது. இதனால் லாரி பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பிற வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயன்றனர்.

இருப்பினும் லாரியை அங்கிருந்து ஓட்டி செல்ல முடியவில்லை. தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. 1 மணி நேரத்துக்குப் பிறகு பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறும் போது, பழுதடைந்து கிடக்கும் சாலையை புதுப்பிப்பதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story