வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய 4 பேர் மீது வழக்கு
வாலிபர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விராமதி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் முத்துராமலிங்கம் (வயது 25) மீது சிலர் போதையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் தட்டி கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிலர் முத்துராமலிங்கம் மீது கொதிக்கும் பாலை ஊற்றி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்டம் சேவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், பிரவீன், சண்முகம், செல்வம் ஆகிய 4 பேர் மீது பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காயமடைந்த முத்துராமலிங்கம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.