செல்போன் வெடித்து கூரை வீடுதீயில் எரிந்து சாம்பல்
கொள்ளிடம் அருகே தாண்டவன்குளத்தில் செல்போன் வெடித்து கூரை வீடு தீயில் எரிந்து சாம்பலானது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே தாண்டவன்குளத்தில் செல்போன் வெடித்து கூரை வீடு தீயில் எரிந்து சாம்பலானது.
செல்போன் வெடித்தது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சி நவநீத கண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த தேவகி (வயது 50). இவர் தனக்கு சொந்தமான செல்போனை நேற்று அதிகாலை சார்ஜரில் போட்டுள்ளார். செல்போன் தொடர்ந்து சார்ஜ் ஆகி கொண்டிருந்தபோது திடீரென வெடித்து அதிலிருந்து தீ வெளியானது.
இந்த தீ வீட்டு கூரையில் பட்டு கூரை மள,மள வென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.
எரிந்து நாசம்
இதில் வீட்டிற்குள் இருந்த டி.வி., கிரைண்டர் மிக்சி கட்டில் மற்றும் வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன்,ஊராட்சி உறுப்பினர்கள் குபேந்திரன், காத்தலிங்கம் ஆகியோர் தீ விபத்தில் வீட்டை இழந்த தேவகியிடம் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினர். மேலும் உடனடியாக அரசின் கான்கிரீட் வீடு கட்டித் தருவதாகவும் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.