ஜவுளித்துறைக்கு அதிக திட்டங்களை மத்திய அரசு கொடுக்கும்


ஜவுளித்துறைக்கு அதிக திட்டங்களை மத்திய அரசு கொடுக்கும்
x

ஜவுளித்துறைக்கு அதிக திட்டங்களை மத்திய அரசு கொடுக்கும் என ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர் தெரிவித்தார்.

கரூர்

ஜவுளி பூங்கா

கரூர் அருகே அமைந்துள்ள ஜவுளி பூங்காவை நேற்று இந்திய ஜவுளி அமைச்சகத்தின் வர்த்தக ஆலோசகர், கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் சுப்ரா மற்றும் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டு கூடுதல் ஆணையர் சந்தோஷ்குமார் சிங் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து கரூர் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் செயல்பட்டு வரும் சலவை ஆலை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

அப்போது ஆணையர் சுப்ரா நிருபர்களிடம் கூறும்போது, கரூர் ஜவுளி பூங்காவை பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பூங்காவில் என்ன தயாரிக்கிறார்கள், எந்த மாதிரியான எந்திரங்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொண்டது பயன் உள்ளதாக இருக்கிறது. டெக்ஸ்டைல்ஸ்க்கு பாலிசி, திட்டங்கள் கொண்டு வரும் போது இதனை பற்றி தெரிந்து கொண்டு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்ததாக அதிக தொழிலாளர்களை கொண்டுள்ள துறை ஜவுளித்துறை. மத்திய அரசு ஜவுளித்துறைக்கு இன்னும் அதிகமான திட்டங்கள் கொடுக்க விரும்புகிறார்கள். ஜவுளி துறையை மேம்படுத்த இந்த ஆய்வு உதவியாக இருக்கும், என்றார்.

கோரிக்கை மனு

பின்னர் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிட அரங்கில் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் சுப்ரா மற்றும் கூடுதல் ஆணையர் சந்தோஷ்குமார் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கரூரில் ப்ராசஸிங் யூனிட், திறன் மேம்பாடு, ட்ரேடு சென்டர் உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுவை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஆணையர் சுப்ராவிடம் வழங்கினார். இதில் கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சி கழக செயல் இயக்குனர் ஸ்ரீதர், செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சேதுபதி உள்பட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Next Story