சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் கால் முறிந்தது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை மனு
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தையின் கால் முறிந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையின் தந்தை மனு அளித்துள்ளார்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி அருள்மொழி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் கடந்த 8-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இ ந்த நிலையில் குழந்தையின் இடது காலில் வீக்கம் இருந்தது. இதை பார்த்த பாரதி ராஜா, குழந்தையை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு ஸ்கேன் செய்து பார்த்தார்.
காலில் எலும்பு முறிவு
அப்போது குழந்தையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பச்சிளம் குழ்தையின் காலில் மாவு கட்டு போடப்பட்டது.
பிறந்து 4 நாட்களுக்குள் காலில் மாவு கட்டு போடப்பட்டதை பார்த்து, பெற்றோர் கண்கலங்கினர்.
புகார் மனு
இதற்கிடையே, பாரதி ராஜா சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரான ரவியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது குழந்தையின் நிலைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்களின் கவனக்குறைவும், அலட்சியப் போக்குமே காரணம். இதற்கு உரிய விசாரணை மேற்கொண்டு காரணமாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.