முகூர்த்த நாளையொட்டி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த திருத்தணி நகரம்
முகூர்த்த நாளான நேற்று, திருத்தணி நகரில் திருமண மண்டபங்கள் நிரம்பி வழிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முகூர்த்த நாள்
திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்தால் சிறப்பு என்பதால் முகூர்த்த நாட்களில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறும். முகூர்த்த நாட்களில் திருத்தணி கோவில் மற்றும் தனியார் மண்டபங்கள் நிரம்பி வழியும். இந்த நாளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். திருத்தணியில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன.
முகூர்த்த நாளான நேற்று திருமணத்திற்கு வந்த பொதுமக்கள், முருகன் கோவிலுக்கு வந்த நிலையில், பக்தர்கள் கூட்டத்தால் அரக்கோணம் சாலை, மேட்டுத்தெரு, ம.பொ.சி.சாலை, கமலா திரையரங்கம், சித்தூர் ரோடு, சென்னை பை-பாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நெரிசலில் சிக்கி தவித்தது.
போக்குவரத்து நெரிசல்
இதன் காரணமாக மாலை 6 முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு சாலையிலும் வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து சென்றன. முகூர்த்த நாட்களில் மூன்று மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் வாகனங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நிற்கிறது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாததால், மன உளைச்சலுக்கு ஆளாகி வாகன ஓட்டிகள் இடையே தகராறு ஏற்பட்டு, கை கலப்பில் முடிகிறது. போக்குவரத்து போலீசார் தீவிர பணியில் ஈடுபடாததே இதற்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
முக்கிய சந்திப்புகளை தவிர மற்ற இடங்களில் போலீசாரை காண முடிவதில்லை. திருத்தணியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்தை சீர் செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.