மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறக்க வேண்டும்
சேத்துப்பட்டு தாலுகா கெங்காபுரம் கிராமத்தில் மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சேத்துப்பட்டு தாலுகா கெங்காபுரம் கிராமத்தில் மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தை திறக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பாதுகாப்பு பணி
மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நேரடி நெல் கொள்முதல் நிலையம்
சேத்துப்பட்டு தாலுகா கெங்காபுரம் வருவாய் கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் ஆரம்பம் முதல் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் மையம் தற்போது இயங்கவில்லை.
இதனால் 20 கிராமத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
கெங்காபுரம் வருவாய் கிராமம் சமத்துவபுரம் பகுதியில் மூடப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆரணி
ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, ஆதரவற்ற விதவை சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 68 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.
இதில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் க.பெருமாள், தாசில்தார் ஆர்.ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.